வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் வாள்களுடன் நின்ற இளைஞர்கள் - அதிரடியாக கைதான வேட்பாளர்கள்

வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் வாள்களுடன் நின்ற இளைஞர்கள் - அதிரடியாக கைதான வேட்பாளர்கள்

நாடாளவிய ரீதியில் அமைதியான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றபோது ஒரு சில இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறிய வேட்பாளர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில்  கிளிநொச்சி - செல்வாநகர் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் வாள்களுடன் நின்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை  பகல் ஒரு மணியளவில் செல்வாநகர் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காரினுள் இருந்து வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை  எடுத்து வருகின்றனர்.

இதேநேரம் விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத குற்றச்சாட்டில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் , ஹொரவ்பொத்தானை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தேகெதிபொத்தான பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வேட்பாளர் 2023 இல் பெற்றுக்கொண்ட 29 ஆயிரத்து 500 ரூபாய் விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம் ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜக்கிய தேசிய கட்சிகளை சேர்ந்த இரு வேட்பாளர்கள் உட்பட மூவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்கவிடாமல் தொந்தரவு செய்தமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்னர்


இதேவேளை புத்தளம் - இரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு அருகில் போலி வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 8 போலி வாக்குச்சீட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதேபோன்று தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்  முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் வைத்து ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் சின்னம் அடங்கிய துண்டுபிரசுரத்தினை  வாக்குச்சாவடிக்கு அண்மித்த பகுதியில் மக்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
இதேநேரம் கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஆரம்ப பாடசாலையில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிகாரி கன்னொருவ தாவர மரபணு வள மையத்தில் மேம்பாட்டு அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கலகெதர, மினிகமுவ பகுதியைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரி தசநாயக்க என்ற 33 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.