ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த உலக தலைவர்கள் : ''நீங்கள் வெட்கமடைய வேண்டும்.." என ஆதங்கம்




ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றுவதை புறக்கணித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. அமைப்பின்  நேற்றைய (26) பொது அவைக் கூட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் காஸாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டும் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டுமெனவும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது உரையில் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (26) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார்.


இதன்போது, அவர் தனது உரையை ஆரம்பித்த உடன் அங்கிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையை விட்டு வெளியேறியுள்ளனர்.


இருப்பினும், அவையில் மீதமிருந்த சில பிரதிநிதிகளின் முன்னிலையில் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையை ஆற்றினார்.

இதில், சுமார் 45 நிமிடங்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் வெற்றிகளைக் குறித்து அவர் உரையாற்றியுள்ளார்.
தனது உரையில்

 
“கடந்த ஆண்டு இங்கு உரையாற்றிய போது இந்த வரைபடத்தை நான் காண்பித்து இருந்தேன். இந்த வரைபடத்தில் ஈரானின் தீவிரவாத செயல்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைபடம் உலகத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

 எங்கள் பிராந்தியத்துக்கும், தேசத்துக்கும் இதே நிலைதான். அணு ஆயுதங்கள் மற்றும் பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருகிறது.
 
அதற்கான திட்ட பணியில் ஈரான் தீவிரம் காட்டுகிறது. இது இஸ்ரேலை மாத்திரம் அழிப்பதற்கானது அல்ல. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதன்மூலம் ஏனைய நாடுகளை ஈரான் அச்சுறுத்தி வருகின்றது.

காசாவில் இருந்து ஹமாஸ், ஏமனில் இருந்து ஹவுதி, லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளின் செயற்பாட்டை நசுக்கி உள்ளோம்.
 
இஸ்ரேல் முயற்சியால் இந்த அமைப்புகளின் முக்கிய தலைவர்களை அழித்துள்ளோம். ஹமாஸ் படையினருக்கு எதிரான எங்களின் ராணுவ நடவடிக்கை தொடரும். நாங்கள் ஹமாஸ் வசம் உள்ள பிணைக் கைதிகளை மறக்கவில்லை. ஒவ்வொரு நொடியிலும் உங்கள் நினைவோடு இருக்கிறோம்.

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது. அந்த அங்கீகாரம், இஸ்ரேலியர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது. இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் வெட்கப்பட வேண்டும். சிறிய ஆதரவுடன் சுமார் ஏழு மோதல்களை இஸ்ரேல் கையாள்கிறது என தெரிவித்தார்.