போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு நேற்று (25) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தட்சிணாமூர்த்தி காத்தையா 45 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவர் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த தண்டனை கடந்த 2022 ஆம் ஆண்டே நிறைவேற்றப்படுவதாக இருந்தது. இருந்தாலும், மேன்முறையீடு காரணமாக அது நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிரான தட்சிணாமூர்த்தி காத்தையாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் தற்போது தூக்கிலிடப்பட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து, போதைப் பொருள் குற்றத்துக்காக இந்த ஆண்டு மாத்திரம் சிங்கப்பூரில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைப் போலவே மலேசியாவிலும் போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக இருந்தது.
ஆனால், சர்வதேச நெருக்கடி காரணமாக மரண தண்டனையை 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைக் தண்டனையாக மலேசிய அரசு குறைத்தது.
கடந்த 2024 இல் மட்டும் மலேசிய அரசு 1,000 மரண தண்டனைகளை சிறைத் தண்டனைகளாகக் குறைத்தது.
ஆனால் சிங்கப்பூரிலோ போதைப் பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றங்கள் இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளன.
இதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.