நெருப்புடன் விளையாடும் மேற்கத்திய நாடுகள் : அமெரிக்கா உலகப் போரைத் தூண்டுவதாக ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்யாவுக்குள் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை முன்னெடுக்க உக்ரேனுக்கு அனுமதி அளித்திருப்பது நெருப்புடன் விளையாடும் செயல் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அத்துடன், மூன்றாம் உலகப் போர் உருவானால் அது ஐரோப்பாவில் மட்டும் நின்றுவிடாது என்றும் ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 6ஆம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேன் படைகள் அதிரடியாக நுழைந்து தாக்குதலை முன்னெடுத்தது.

தற்போது 100 குடியிருப்பு பகுதிகளை உக்ரேன் அங்கு கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ரஷ்யா எதிர்கொள்ளும் மிகப்பெரிய வெளிநாட்டுத் தாக்குதல் என்றே கூறப்படுகிறது. ஆனால், மறக்க முடியாத பதிலடி உறுதி என்றே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உக்ரேன் போரை மேற்கத்திய நாடுகளே தூண்டி விடுவதாக Sergei Lavrov குற்றஞ்சாட்டியுள்ளார். 

 

மேற்கத்திய ஆயுதங்களை ரஷ்ய மண்ணில் பயன்படுத்தக் கோருவது என்பது வினையை விலை கொடுத்து வாங்குவது போனறது எனவும் Sergei Lavrov தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீது போர் தொடுத்ததன் பின்னர், மேற்கத்திய நாடுகளின் ஈடுபாட்டை புடின் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். அது மட்டுமின்றி, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுடன் ஒரு போருக்கு தாம் தயாராக இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது மேற்கத்திய நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை ரஷ்யா உறுதி செய்துள்ளது என Sergei Lavrov தெரிவித்துள்ளதோடு. மேலும், மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் வேலையை அமெரிக்கா செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது ஐரோப்பாவை மிக மோசமாக பாதிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் முன்னெடுத்துள்ள திடீர் ஊடுருவல் என்பது அமெரிக்காவின் ஒப்புதலுடன் நடந்தவை அல்ல என்றும், அதில் தங்களுக்கு பங்கில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.


இதனிடையே ரஷ்யாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் 100 குடியேற்றப் பகுதிகளை கைப்பற்றியுள்ளதோடு 594 ரஷ்ய இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாகவும் உக்ரேன் தெரிவித்துள்ளது.

மேலும், அந்தப் பிராந்தியத்தில் கடந்த 3 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையில் 594 ரஷ்ய வீரா்களைக் கைது செய்துள்ளதாகவும் உக்ரேன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஒலெக்ஸாண்டா் சிா்ஸ்கி  வெளியிட்டுள்ள அறிக்கையில் 

கூா்ஸ்க் பிராந்தியத்தின் 100 கிராமங்கள் தற்போது உக்ரேன் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது அந்தப் பிராந்தியத்தின் 1,294 சதுர கி.மீ. நிலப்பரப்பு உக்ரேன் வசம் உள்ளது. இந்த இராணுவ நடவடிக்கையின்போது 594 ரஷ்ய வீரா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.