முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புடின்..? - ஜெலென்ஸ்கியை மீண்டும் ஏமாற்றிய ட்ரம்ப்



ரஷ்யா - உக்ரேன் போரை நிறுத்த பல வழிகளில் முயற்சித்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதன் ஒரு பகுதியாக இருநாட்டு ஜனாதிபதிகளையும் சந்திக்க வைக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தொடங்கிய போர் 4 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில் அனைத்து போர் நிறுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

 அமெரிக்க ஜனாதபதியாக பதவியேற்ற ட்ரம்ப், தன்னுடைய முதலாவது குறிக்கோள் இந்த போரை நிறுத்துவதுதான் என சூளுரைத்து களம் இறங்கினார்.

போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் - புடின் இடையே அலாஸ்காவில் நடந்த சந்திப்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் பயனற்று போனது.

இந்நிலையில் நேற்று உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் கலந்தரையாடியுள்ளார்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் ரஸ்ய ஜனாதிபதி புடினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.
 

இதன்போது, உக்ரேன் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்தித்து பேசலாம் என இருவரும் முடிவு செய்தனர்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய ஜனாதிபதியின் கிரம்ளின் மாளிகை விடுத்துள்ள செய்தியில் குறிப்பில்,
ஜனாதிபதி ட்ரம்பிடம், ஜனாதபதி புடின் தொலைபேசியில் பேசிய விடயங்கள் ஊடகத்திடம் தெரிவிக்கப்படாது. உக்ரேன் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷ்யா தயாராக இருப்பதாக ட்ரம்பிடம், புடின் கூறினார். இது தொடர்பாக இருவரும் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்தித்து பேசுவர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

 இஸ்ரேல் - காசா அமைதி பிரச்சினையில் ஏற்பட்ட வெற்றி, ரஷ்யா - உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என நம்புகிறேன். ரஷ்ய ஜனாதிபதி புடினும், நானும், ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் சந்திக்கவுள்ளோம். அப்போது உக்ரேன் பிரச்சினை முடிவுக்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.

இதேநேரம் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை, நேற்று வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்த போது ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசிய பேசிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பாக ரஸ்ய உக்ரேன் ஜனாதிபதிகளை தனித்தனியாக சந்தித்து பேசி வரும் ட்ரம்ப், இருவரையுமே சந்திக்க வைத்து பேச வைக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்து பேசினால் மாத்திரமே இந்த பிரச்சினையில் முழுமனதான முடிவை எட்ட முடியும் என்று ட்ரம்ப் நம்பும் நிலையில் இது சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதேநேரம் உக்ரேன் ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பிப் போது அமெரிக்காவின் சக்திவாய்ந்த Tomahawk க்ரூஸ் ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்க முடியாது என ஜெலென்ஸ்கியை மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் ஏமாற்றியுள்ளார் .

எதிர்காலத்தில் போர் மூளும் சூழல் ஏற்பட்டால், Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள் அமெரிக்காவிற்கு தேவைப்படும் என்றே ஜெலென்ஸ்கியிடம் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

உக்ரைனுக்கு கடந்த நான்கு வருடங்களாக அனுப்பியுள்ள பல ஆயுதங்களும் அமெரிக்காவிற்கு எதிர்காலத்தில் தேவைப்படுபவை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெரும் எண்ணிக்கையிலான மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அளிப்பது என்பது எளிதான விவகாரம் அல்ல என்றும், அவர்களுக்கு அதன் தேவை இல்லை என நம்புவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


மட்டுமின்றி, Tomahawk க்ரூஸ் ஏவுகணைகளை நம்பாமல், போரை முடிவுக்கு கொண்டுவருவதில் முயற்சிகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசும் முன்னர் வரையில், Tomahawk க்ரூஸ் ஏவுகணை தொடர்பில் உக்ரைனுக்கு நம்பிக்கை அளித்து வந்த ட்ரம்ப், தற்போது அப்படியான ஆபத்தான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கினால், அது போரை மேலும் உக்கிரமடையச் செய்யும் என விளக்கமளித்துள்ளார்.