உச்ச கட்டத்தில் போர்.. தீவிரம் காட்டும் இஸ்ரேல்! பாலஸ்தீன பலி எண்ணிக்கை 40,000ஐ கடந்தது


 பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் போரால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,000ஐ கடந்திருக்கிறது. இதனையடுத்து போர் நிறுத்தம் குறித்த கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
 
இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
 
இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளியாகும். ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.


போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சரியாக சொல்வதென்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,435ஆக இருக்கிறது.
 
இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7வீத மக்கள் அதாவது 93,534 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.
 
25 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

இப்படியாக நிலைமை மோசமடைந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க தொடங்கின. எனவே, அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டன.
 
இவை அனைத்தும் இஸ்ரேல் ஆதரவு நாடுகள் ஆகும்.  பணய கைதிகளை விடுவித்தல், தாக்குதலை கைவிடுதல் என இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்க முன்வந்தது.  

இந்நிலையில் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொலை செய்தது.
இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு பதிலடி கொடுப்போம் எனவும் ஹமாஸ் அறிவித்திருக்கிறது.

 அதுமட்டுமல்லாது ஹமாஸ் ஆதரவு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு பதற்றம் நிலவி வருகிறது.
 
ஈரான் உள்ளிட்ட நாடுகள், இனி வரும் நாட்களில் போரில் நேரடியாக பங்கேற்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமா அமைந்துவிடும் என அஞ்சப்படுகின்றது.