காசாவில் ஐ.நா. புகலிடம் மீது இஸ்ரேல் தாக்குதல் : 40க்கும் மேற்பட்டவர்கள் பலி

 

மத்திய காசாவில் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நிரம்பி வழியும் ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நுஸைரத் அகதி முகாமில் உள்ள பாடசாலையின் மேல் மாடி வகுப்புகள் மீது இரு ஏவுகணைகள் கொண்டு இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் ஹமாஸ் நிலை ஒன்றை இலக்கு வைத்தே துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் கொடிய படுகொலை ஒன்றை செய்ததாக ஹமாஸ் ஊடக அலுவலகம் குற்றம்சாட்டியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அம்புலன்ஸ் மற்றும் மீட்புக்குழுவினர்கள் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். வகுப்பறைகள் தகர்க்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் போர்வைகளால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் படங்கள் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளன.


‘இந்தப் போர் போதும்! நாம் பல தடவைகள் இடம்பெயர்ந்து விட்டோம். எமது குழந்தைகளை அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொலை செய்கிறார்கள்’ என்று இந்த தாக்குதலில் காயமடைந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.

இந்த பாடசாலை ஹமாஸ் கட்டளையகமாக இருந்தது என்ற இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் ஊடக அலுவலகத்தின் பணிப்பாளர் இஸ்மைல் அல் தவப்தா மறுத்துள்ளார். 'இடம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடிய குற்றத்தை நியாயப்படுத்துவதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை குறிப்பிடுகின்றனர்’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

மத்திய காசாவில் இஸ்ரேல் புதிய படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இஸ்ரேல் நடத்தும் சரமாரி தாக்குதல்களில் 100 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் நுஸைரத் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனை வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. அந்தப் பகுதியில் புரைஜ் மற்றும் அல் பகாஸி முகாம்களிலும் இஸ்ரேல் உக்கிர செல் தாக்குதல்களை நடத்தி வருவதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மறுபுறம் தெற்கு நகரான ரபாவிலும் இஸ்ரேலின் தாக்குதல் நீடிப்பதோடு அங்கு கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியதாக உள்ளூர் தரப்பினரை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலுடன் ஆரம்பமான இந்தப் போர் இன்றுடன் எட்டு மாதங்களை பூர்த்தி செய்யும் நிலையில் காசா பகுதி முழுவதும் பேரழிவு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 68 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 235 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த எட்டு மாதங்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 36,654 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 83,309 பேர் காயமடைந்துள்ளனர்.