5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே நேற்றிரவு சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரேன் போர் நிறுத்தம் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
புடினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய தரப்பில் ஜனாதிபதி புடினுடன் வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், நிதியமைச்சர் அண்டன் சிலுன்னோவ் மற்றும் 2 சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க - ரஷ்ய உறவு, உக்ரேன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பின்னர் ட்ரம்ப் - புனெ; இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட புடின், “நமது இரு நாடுகளும் பொதுவான எதிரிகளுடன் எவ்வாறு போரிட்டோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். இந்த பாரம்பரியம் எதிர்காலத்தில் நமக்கு உதவும். உக்ரேனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன். பரஸ்பர ஒப்பந்தம் உக்ரேனின் அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,
“புடின் உடனான இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது. ஆனால் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் உக்ரேன் போர் நிறுத்த விவகாரம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் இதுவரை நான் தொலைபேசியில் பேசவில்லை. விரைவில் அவருடன் பேச திட்டமிட்டிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் ட்ரம்ப் கூறும்போது, “இப்போது இதைச் செய்து முடிப்பது உண்மையில் ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும். ஐரோப்பிய நாடுகளும் இதில் கொஞ்சம் தலையிட வேண்டும் என்று நான் கூறுவேன், ஆனால், இது முழுக்க ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும்” என்றார்.
முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் ரஷ்யா, உக்ரேன் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இப்போதைய நிலையில் உக்ரேனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இது தொடர்பாக கடந்த பெப்ரவரி 12, மார்ச் 18, மே 19, ஜூன் 4 ஆகிய திகதிகளில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ஜனாதிபதி ட்ரம்ப் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க, ரஷ்ய ஜனாதிபதிகள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியானது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் “இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகும் உக்ரேனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். என்னவிதமான விளைவுகள் என்பதை இப்போதைக்கு பகிரங்கமாக கூற முடியாது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே நேற்றிரவு நடைபெற்ற ரஷ்ய ஜனாதிபதியுடனான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் சந்திப்பில், உக்ரேன் போர் நிறுத்தம் குறித்து எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.