மீன்வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடிக்கு நேர்ந்த துயரம்மீன் வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடி விபத்தில் சிக்கியதில் காதலி உயிரிழந்ததுடன் காதலன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

களுத்துறை வெந்தேசிவத்த பிரதேசத்தில் வசித்து வந்த உதேனி நிமாஷா என்ற 23 வயதுடைய யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் விஞ்ஞானம் பயிலும் இறுதியாண்டு மாணவியான இவருக்கு எதிர்வரும் 28ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (23) இரவு களுத்துறையிலிருந்து மத்துகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்கள் கல்அச்சேன சந்தியில் நிறுத்தி மீன் வாங்கிக் கொண்டிருந்தனர்.

அவ்வேளை களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பாரவூர்தியொன்று இவர்கள் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் யுவதி உயிரிழந்துள்ளதாகவும், இளைஞன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.