இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூரும் நாள் இன்று! தேவாலயங்களில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு!

நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (29) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, நாளை மறுதினமும் (31) இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்று, புனித வெள்ளியை அனுஸ்டிப்பதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாட உள்ளனர்.

இந்தநிலையில், இலங்கையில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று. நாட்டில் உள்ள 3 தேவாலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில், பயங்கரவாத குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னரான நாட்களில் இவ்வாறு தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த நிகழ்வின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதற்கமைய, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், விசேட ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இதேநேரம் உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) கருத்துக்களை அறிக்கையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.