வெலிகம பிரதேச சபைத் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியுமான லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக பாதாள உலக குழுக்களுடன் அவருக்கு இருந்த தொடர்பின் விளைவாக குறித்த படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்படுள்ள பாதாள உலக தலைவர் ஹரக் கட்டாவின் நெருங்கிய சகா என லசந்த விக்ரமசேகர தொடர்பில் தகவல்களும் வெளியாகியுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணை
இந்நிலையில், நேற்று (22) காலை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பாதாள உலகத் தலைவர்கள் மீது காவல்துறை கவனம் செலுத்தியுள்ளது.
இந்தக் கொலை தொடர்பான ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளின் போது, துபாயில் மறைந்திருக்கும் பாதாள உலகத் தலைவரான ரோடும்ப அமிலவின் சகா மீது காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தலைவருக்கும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுக்கும் ரோடும்பா அமில முன்னாள் நெருங்கிய தொடர்பை பேனியதாகவும், அவர் இருவருக்கும் ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தற்போது பூஸ்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக உறுப்பினர் 'மிதிகம ருவான்' மீது வலுவான சந்தேகம் எழுந்துள்ளதாக விசாரணைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
துபாயில் இருந்தபோது கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட மிதிகம ருவான், ஹரக் கட்டாவின் முக்கிய உதவியாளர் ஆவார். கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகர (லாசா), ஹரக் கட்டாவின் கும்பலில் ஒரு காலத்தில் ஒரு பலசாலியாக இருந்துள்ளார்.
ஆனால் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டதிலிருந்து ஹரக் கட்டாவிடம் இருந்து அவர் விலகி இருந்ததாக கூறப்படுகிறது.
நான்கு T-56 துப்பாக்கிகள்
செப்டம்பர் 24 அன்று வெலிகமாவில் சிறப்பு அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு T-56 துப்பாக்கிகள் குறித்து லசந்த விக்ரமசேகரவே தகவல் வழங்கியதாக மிதிகம ருவானுக்கு இருந்த வலுவான சந்தேகமே இந்தக் கொலைக்கான உடனடி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த துப்பாக்கிகள் மிதிகம ருவானுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ருவானின் கும்பலால் விக்கிரமசேகர தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறையில் இருக்கும் மிதிகம ருவான், முன்னதாக தனது முகப்புத்தக பதிவொன்றில் "அன்புள்ள தலைவரே, நீங்கள் இப்போது வெள்ளை நிறத்தில் உடை அணிகின்றீர்கள்.
நீங்கள் கருப்பு நிறத்தில் நிறத்தில் அணிந்தபோது நாங்கள் அனைவரும் ஒரே படகில் இருந்தோம் என்பதை மறந்துவிடாதீர்கள். கொள்கை அடிப்படையில் நான் ஒரு பசுவைக் கொல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் லசந்த விக்கிரமசேகர ஒகஸ்ட் 29 ஆம் திகதி ஐஜிபிக்கு கடிதம் எழுதி, மிதிகம ருவானிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறி, பாதுகாப்பும் கோரியுள்ளார்.
காவல்துறை அறிக்கைகளின்படி, “கொலை செய்யப்பட்ட லசந்த நாட்டில் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளி (எண். 103/215) மற்றும் இறந்த பாதாள உலகத் தலைவர் மாகந்துரே மதுஷுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
2008 ஆம் ஆண்டு ஆடைத் தொழிலாளர்களிடமிருந்து நகைகளைக் கொள்ளையடித்ததற்காக மாத்தறை மேல் நீதிமன்றத்திலும், 'சன்ஷைன் சுத்தா' கொலைக்கு உதவியதற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திலும் அவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருந்தன.
மேலும், 2017 ஆம் ஆண்டு காலியில் நடந்த ஒரு மோசடி வழக்கிலும், குருநாகலில் நடந்த ஒரு சொத்து மோசடி வழக்கிலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு, T-56 துப்பாக்கியை வைத்திருந்ததற்காக சிறப்பு அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் லசந்தவின் உடலில் ஆறு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.