கொழும்பு பேலியகொடை - ஞானரத்ன மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய ஒருவரே, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் கொழும்பு 15 ஐ சேர்ந்த, பேலியகொட மீன் சந்தையில் பணிபுரிந்துவந்த ஒருவரென தெரியவந்துள்ளது.
அதேநேரம், இந்த சம்பவத்தில் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு அருகில் பயணித்த பாதசாரி ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 15 ஐ சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு டீ56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் எவ்வாறு குற்றம் நடந்த இடத்திற்கு வந்து வெளியேறினர் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து பேலியகொட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.