இலங்கைத் தமிழர்கள் 76 பேருடன் சென்ற கப்பல்! கனடா எடுத்துள்ள முடிவு

2009ஆம் ஆண்டு 76 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கையிலிருந்து ஏற்றிக்கொண்டு கனடா சென்ற MV Ocean Lady என்னும் கப்பலை பிரிப்பது என கனடா அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

நீண்ட காலமாக பிரிட்டிஷ் கொலம்பியக் கடற்கரையில் நின்றிருந்த குறித்த கப்பலை தற்போது Campbell நதிக்குக் கொண்டு சென்று பிரிப்பது என அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றன.

இன்று கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் , MV Ocean Lady என்னும் கப்பல் குறித்து மறந்திருக்கமாட்டார்கள்.

ஏனெனில், 2009ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி, 76 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கையிலிருந்து ஏற்றிக்கொண்டு 1990ஆம் ஆண்டு ஜப்பானில் கட்டப்பட்ட MV Ocean Lady என்னும் கப்பல் சென்றது.

அந்தக் கப்பலை வான்கூவர் தீவின் மேற்குக் கரையருகே வழிமறித்தார்கள் கனடா அதிகாரிகள். பின்னர் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் அகதி நிலை கோரி விண்ணப்பித்தார்கள்.

2010ஆம் ஆண்டளவில் அந்தக் கப்பலில் வந்தவர்களில் பெரும்பாலானோர் ரொரன்றோவில் குடியமர்ந்ததாக கூறப்படுகிறது.

தற்போது அவர்களுடைய நிலை என்ன என கனடா எல்லைப் பாதுகாப்பு பிரிவால் கூற இயலவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன் பலர் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், சிலர் நாடுகடத்தப்பட உத்தரவிடப்பட்டதாகவும், அகதி நிலை நிராகரிக்கப்பட்ட சிலர் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததாகவும் ஓர் தகவல் தெரிவிக்கிறது.

இந்நிலையில், இவ்வாறான வரலாறு கொண்ட ஒரு கப்பலை அழிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவு பேசுபொருளாக மாறியுள்ளது.