ஹிட்லர் போல் செயற்பட்ட ராஜபக்ச குடும்பம்: மொட்டுக்கட்சிக்கு அநுர அரசு பதிலடி

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசமைப்பின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றார். இதனால் தான் அரசமைப்பு மீறல் தொடர்பில் அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு கூட இல்லை. அவர் சர்வாதிகாரி ஹிட்லர் போல் செயற்படவில்லை.

ராஜபக்ச குடும்பத்தினர்தான் ஹிட்லர் போல் செயற்பட்டனர் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஹிட்லர் போல் செயற்படுகின்றார் எனவும், ஹிட்லரைத் தோற்கடிப்பதற்காக அன்று ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்தது போல் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டிந்தார்.

சர்வாதிகார ஆட்சி

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

"மகிந்த ராஜபக்சவும், அவரது குடும்பத்தாரும் தான் ஹிட்லர் போல் செயற்பட்டனர். ஜனநாயகத்துக்குச் சமாதி கட்டி சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கு 18 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

இதனை சாகர காரியவசம் மறந்து விட்டார் போலும். எமது ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரமே செயற்படுகின்றார்.

நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். இந்தக் கோட்பாட்டை நாம் மீறப்போவதில்லை." - என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேலும் கூறியுள்ளார்.