லண்டனில் உலகைத் திரும்பிப்பார்க்கவைத்த ஈழத்தமிழனின் நூல் வெளியீடு


கனடாவின் பிரபலமான தமிழ்தொழிலதிபரும் கனேடிய முன்னணி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் உள்ள ரோய் ரட்ணவேல் எழுதிய 'பிறிசினர் 1056' என்ற நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை லண்டனில் இடம்பெறவுள்ளது.

சிறிலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தென்னிலங்கை தடுப்பு முகாமில் ரோய் ரட்ணவேல தடுத்து வைக்கப்பட்டபோது அவர் தனக்கு கிட்டிய குருரமான துன்புறுத்தல்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து எழுதிய இந்த ஆங்கில நூல் மேற்குலகில் உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஒருநூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழனத்தின் மீது சிறிலங்கா படைத்தரப்பு மேற்கொண்ட இராணுநடவடிக்கைகளில் யாழ் குடாவின் வடமராட்சி பகுதி மீது 1987 மே மாதம் நடத்தப்பட்ட 'ஒப்ரேசன்லிபரேசன்' நடவடிக்கை பெரும் அழிவுகளை விதைத்திருந்தது.

அந்த நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களில் 17 வயதான ரோய் ரட்ணவேலும் ஒருவர்.

கைதுசெய்யப்பட்ட இவர் தென்னிலங்கையில் உள்ள இராணுவமுகாமுக்கு கொண்டுசெல்லபட்டு துன்புறுத்தல்களுக்கு இலக்காகியிருந்தார்.

ஒரு கட்டத்தில் விடுதலையான இவர் 1988ஆம் ஆண்டு வெறும் 50 டொலர்களுடன் ஒரு ஏதிலியாக கனடாவுக்கு புலம்பெயர்ந்திருந்தார்.

அவர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த வேளை அவரது தந்தையும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

18 வயதில் வெளிநாட்டு வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாத புலம்பெயர்ந்த அந்த இளையவர் கனடாவில் பிரபலமான நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் உருவாகியுள்ளார்

அத்துடன் இலங்கையில் சிறையிடப்பட்டவேளை தனது சிறை அடையாளமாக இருந்த 1056 என்ற அடையாளத்துடன் ஒரு நூலையும் ரோய் ரட்ணவேல் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய Prisoner-1056 என்ற நூல் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டுவரும் நிலையில் லண்டனில் அது இன்று வெளியிடப்படவுள்ளது.

சவுத் றைசிலிப்பகுதியில் உள்ள கிறாண்ட் வியூ மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறும் இந்தநிகழ்வில் பங்கேற்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.