சீன கடலில் அடுத்தடுத்து விழுந்த அமெரிக்க விமானம், ஹெலிகொப்டர்.. : அதிர்ச்சியில் அதிகாரிகள்


தென் சீனக் கடற்பகுதியில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் ஒரு போர் விமானமும் ஒரு ஹெலிகொப்டரும் அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தன.

 
நேற்று முன்தினம் பிற்பகல், முதலில் எம்எச்-60ஆர் ரக ஹெலிகொப்டர் வழக்கமான கண்காணிப்பு பணியின்போது கடலில் விழுந்தது.
இதில் இருந்த 3 வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சிறிது நேரத்தில், எஃப்ஃஏ-18எஃப் சூப்பர் ஹார்னெட் ரக போர் விமானமும் விபத்தில் சிக்கியது. இதிலிருந்த 2 விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
 
மத்திய கிழக்கு வர்த்தக கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்கும் பணியில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கப்பல் ஈடுபட்டிருந்த நிலையில், இந்தத் தனித்தனி விபத்துகள் அமெரிக்கப் பாதுகாப்பு துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை.