ரணிலுக்கு ஆதரவான போராட்டத்தில் பொலிஸாரை தாக்கியவர் அரசியல்வாதியே : அதிரடியாக கைதானார்



கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த நபர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் 52 வயதுடைய களுத்துறை பகுதியைச் சேர்ந்த முன்னாள்  பிரதேச சபை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக  கடந்த 26ஆம் திகதி கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.  

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது  போத்தால் தாக்குதல் நடத்தினார்.

இதன்போது குறித்த பொலிஸ் அதிகாரி படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இந்தநிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்று ஆராய்ந்து சந்தேகநபரை அடையாளம் கண்டனர்.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.