''செவ்வந்தி இன்னும் உங்களை பற்றி எதுவும் கூறவில்லை.. பதற்றமடைய வேண்டாம்.." நாமலுக்கு அரசாங்கம் விடுத்துள்ள தகவல்



குற்றச் செயலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச அச்சம் அடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  பிரதியமைச்சர் எரங்க குணசேகர

கைது செய்யப்பட்டுள்ள இஷாரா தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுத்து அவருடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

நாமல் தொடர்பான எந்தத் தகவலையும் இஷாரா இன்னும் வெளியிடவில்லை. அது குறித்த நாமல் அச்சமடையத் தேவையில்லை என்றார்.  

இதேநேரம் இஷாராவை கைது செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

செவ்வந்தியை கைது செய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருடம் சென்றுள்ள நிலையில், மக்களின் குறைகளை தீர்க்க அரசாங்கம் எவ்வளவு காலம் எடுக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேநேரம் இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.