சீரற்ற வானிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அபாய எச்சரிக்கையும் தொடர்கிறது


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

 அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் தலா 02 பேரும், கேகாலை மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தங்களில் 13 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையினால் 13 மாவட்டங்களில் 65,777 குடும்பங்களைச் சேர்ந்த 2,47,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 41 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அதேவேளை, 4,162 குடும்பங்களைச் சேர்ந்த 15,735 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதுடன், 2,592 குடும்பங்களைச் சேர்ந்த 10,820 பேர் 151 இடைதங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அத்தனகல ஓயாவிற்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை நாளை மாலை 03 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்தனகலஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால், தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, கம்பஹா, வத்தளை, ஜா-எல, கட்டான, மினுவங்கொட ஆகிய பகுதிகளுக்கு தொடர்ந்தும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த அபாய நிலை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹா, ஜாஎல, வத்தளை, மினுவாங்கொட, கட்டான ஆகிய பகுதிகளில் இன்று படிப்படியாக நீர்மட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் களனி கங்கைப் படுகையின் தாழ்வான பகுதிகளான கடுவெல, பியகம, கொலன்னாவை, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, கண்டி, கொழும்பு, குருநாகல், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத்த, அயகம, பெல்மதுல்லை, குருவிட்ட, எஹெலியகொட, இரத்தினபுரி, நிவித்திகல, கிரியெல்ல மற்றும் கலவானை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, மத்துகமை, பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.