கொழும்பை இராணுவ தளமாக்கும் அரசின் திட்டம் தோல்வி - பீரிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

முழு கொழும்பையும் இராணுவ தளமாக மாற்றும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட்டமை மனித உரிமையில் அக்கறை கொண்ட அனைவருக்கும் கிடைத்த பாரிய வெற்றி என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மிகவும் ஆபத்தானதும் முற்றிலும் சட்டவிரோதமானதுமான வர்த்தமானி அறிவித்தல் என தெரிவித்த அவர்,அது நடைமுறைப்படுத்தப்பட்டால் கொழும்பு முழுமையான இராணுவத் தளமாக மாறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் முற்றாக அழிக்கப்படும் நிலை அந்த வர்த்தமானி அறிவிப்பில் பிரதிபலித்தது என்றும் அதன் காரணமாகவே மனித உரிமைகளை பூஜ்ஜியமாக குறைத்த வர்த்தமானியை அதிபர் இரத்து செய்ய நேரிட்டதாகவும் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

வர்த்தமானி இரத்து செய்யப்பட்டமைக்கு இலங்கையின் ஊடகங்களுக்கு அதிக நன்மதிப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த பேராசிரியர், வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை ஊடகங்கள் மக்களுக்கு உரிய முறையில் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி. எல்.பீரிஸ் 'சுதந்திர மக்கள் பேரவை' விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.