நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுக்க முயன்ற இளம் யுவதிக்கு நேர்ந்த கதி : சினிமா பாணியில் சிக்கினார்




யாழப்பாணம் நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

 நேற்றைய தேர் திருவிழாவின் போது, இளம் யுவதி ஒருவர், பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார்.

அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் இருந்த பொலிஸாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை , யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் பொலிஸார் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக எட்டு பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.