மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை 10 ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவனின் தந்தை இறுதியாக பார்க்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை ,தாய்,மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் கடந்த 10 ஆம் திகதி மாலை நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை ,தாய்,மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.
எனினும் பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மேலும் பலத்த காயமடைந்த தந்தை, தாய் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகிய மூவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த 12 வயதுடைய சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த 4 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(11) மகன் இறந்த செய்தியை தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுந்து நடக்க முடியாத நிலையில், தனது நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கும் முன்னர் வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு காண்பிக்கப்பட்ட நிலையில்,தனது மகளின் உடலை தடவி தந்தை அஞ்சலி செலுத்தினார்.
குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.