செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் வகையில் காணொலி எடுத்த ஐவர் அடங்கிய கும்பலொன்று மடக்கிபிடிக்கப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் செம்மணி மனித புதைகுழி அகழ்வுபணிகள் நடைபெற்று வருகிறன.
நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை அப்பகுதிக்கு வேனில் வந்த கும்பலொன்று அகழ்வு நடைபெறும் பகுதியை காணொலி எடுத்தது.
இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், ஏன் காணொலி எடுக்கிறீர்கள் என கேள்வியெழுப்பிய போது, தாங்கள் ஊடகவியலாளர்கள் எனப் பொய் கூறியுள்ளனர்.
இதன்போது ஊடகவியலாளர் அடையாள அட்டையை காட்டுமாறு கூறவே, பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் வகையில் காணொலி எடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்தக் கும்பலை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்திய நிலையில், குறித்த குழு வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் எனத் தெரியவந்தது.
இந்நிலையில் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் அந்தக் குழுவினர் விடுவிக்கப்பட்டனர்