''ஜே.கே. பாய் என்பவரே இலங்கையின் முக்கிய குற்றவாளிகளை நாடு கடத்தியுள்ளார்... " : விசாரணையில் அம்பலம்



புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை பின்னணியில் இருந்த இஷாரா செவ்வந்தி மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் நேபாளத்தில் மறைந்திருந்தபோது 13 திகதி இரவு கைது செய்யப்பட்டனர்.

26 வயதுடைய இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே, கிளிநொச்சி- பளையை சேர்ந்த 33 வயதுடைய ஜீவதாசன் கனகராசா- சுரேஸ், யாழ் மிருசுவிலை சேர்ந்த 23 வயதுடைய தக்ஷி நந்தகுமார், 49 வயதுடைய தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதுடைய கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் மற்றும் 43 வயதுடைய தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே ஆகியோரே கைது செய்யப்பட்டு நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை விமானம் யு.எல். 182 நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து நேற்று (15) மாலை 6.55 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோர் நேபாளத்தில் நடத்திய மூன்று நாள் சோதனையில் இந்த பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டது.

இந்நிலையில் செவ்வந்தியுடன் கைதான யாழ் நபர்கள் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை ஜே.கே. பாய், இஷாரா செவ்வந்தியை படகில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அங்கேயே வைத்திருந்து பின்னர் ஆறு நாள் ரயில் பயணத்தின் மூலம் நேபாளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடல் வழியாக குற்றவாளிகளை மற்ற நாடுகளுக்கு கடத்துவதை தனது தொழிலாகக் கொண்ட ஜே.கே. பாய், தனது தொடர்புகளைப் பயன்படுத்தி எல்லை தாண்டி நேபாளத்திற்கு கொண்டு வந்து காத்மாண்டுவில் ஒரு வாடகை வீட்டையும் அவருக்கு வழங்கியுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு பல நாட்களாக கொழும்பைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, பின்னர் மித்தேனியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு ஒளிந்து கொள்ள சம்பத் மனம்பேரியின் உதவி அவருக்கு கிடைத்ததா என்பது தொடர்பிலும்  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்தேன ஜே.கே. பாய் உடன் தொடர்பினை ஏற்படுத்தி யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கு பதுங்கியிருந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலும் அவர் இஷாரா செவ்வந்தியை மிகவும் ஒத்த தோற்றமுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் தரவு மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இஷாரா செவ்வந்தியின் பெயரில் ஒரு போலி கடவுசீட்டு தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் செவ்வந்தியை ஐரோப்பாவிற்கு அனுப்ப திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில், ஜே.கே. பாய் இந்தத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதுடன் ஆனால், பத்மே மற்றும் அவரது கும்பல் கைது செய்யப்பட்டபோது அந்தத் திட்டங்கள் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில் ஜே. கே.பாய் என்ற சந்தேகநபர் இசாரா செவ்வந்திக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செவ்வந்திக்காக  கெகல்பத்ரே பத்மேவினால் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 குறிப்பாக, இசாரா செவ்வந்தியை கெகல்பத்ரே பத்மே காட்டிக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.