சாரதி மீது சந்தேகம் : சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் மனைவி CIDல் முறைப்பாடு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் 11வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனம் முன்னால் சென்ற கொள்கலன் ஊர்தி ஒன்றுடன் மோதி கடந்த மாதம் 25 ஆம் திகதி அதிகாலை விபத்துக்குள்ளாகியது.

பின்னர் குறித்த விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,  முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மரணித்த வீதி விபத்து தொடர்பில் சந்தேகம் நிலவுதாகவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை கோரி அவரின் மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதையடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தற்போது தங்கியுள்ள இல்லத்திற்கு சென்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற விதம் மற்றும் சாரதியின் நடத்தைகள் தொடர்பிலும் சிக்கல் நிலை காணப்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தமது கணவரின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த விபத்துக்கு முன்னதாக, வாட்ஸ்அப் செயலியின் ஊடாக பதிவிட்டிருந்த மரணம் தொடர்பான குறிப்பு தொடர்பில், சாரதியின் கைபேசியை அடிப்படையாக கொண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது