தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு (M.A.Sumanthiran) எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை - தி.நகர் - தாமோதரன் தெருவிலுள்ள இந்து மக்கள் கட்சி காரியாலயத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு போராட்டம் இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தோடு இணைந்து, ஈழ மக்களுக்கு எதிராக சுமந்திரன் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஈழத்துக்காக தமிழகத்தில் 18 பேர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவ்வாறான தேசத்திற்கு சுமந்திரன் போன்றவர்கள் வருகைதர அனுமதிக்கக்கூடாது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சென்னைக்கு சென்றிருந்த சுமந்திரனை, உடனடியாக திருப்பி அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை பேரவையின் விசாரணைகளை ஒத்தி வைப்பதற்கு சுமந்திரனே காரணம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எம்.ஏ..சுமந்திரனை, தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            