ஆப்கானிஸ்தானில் மீண்டும் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு



ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் திகதியன்று ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சோகம் முடிவதற்குள், நேற்றிரவு மீண்டும் தெற்கு ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் இருப்பதால், மீட்புப் பணிகள் மிகவும் சவாலாக உள்ளன.

இதனால், தொலைதூர மலை கிராமங்களில் வசித்தவர்களின் நிலை குறித்துத் தகவல் இல்லாததால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
 
தெற்கு ஆப்கானிஸ்தானில் 160 கி.மீ. ஆழத்தில்  நேற்று இரவு 10.26 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதன் அதிர்வுகள் ஜம்மு-காஷ்மீர், டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான இந்த நிலநடுக்கங்கள், ஆப்கானிஸ்தான் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.