ஸ்ரீயானி டிரெஸ் பாயின்டின் 'கயல்' நவீன ஆடை கண்காட்சி

 

இலங்கையின் மிகப்பெரிய ஆடை உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களில் ஒன்றான ஸ்ரீயானி டிரெஸ் பாயின்ட் ஏற்பாடு செய்துள்ள 'கயல்' நவீன ஆடை கண்காட்சி பெப்ரவரி 11 ஆம் திகதி கண்டி ஏர்ல்ஸ் ரீஜென்சி ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக அதன் நிறுவுனரும் தலைவருமான மாரியப்பிள்ளை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில்  கடந்த புதன்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஸ்ரீயானி டிரெஸ் பாயின்ட் என்பது 1993 ஆம் ஆண்டு கேகாலை பிரதேசத்தில் நான்கு ஊழியர்களால் நிறுவப்பட்ட வர்த்தக வர்த்தக நாமமாகும். இது சமீபத்திய ஃபேஷன், நகைகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நவீன வீட்டுத் தேவைகளுக்காக நுகர்வோரின் நம்பிக்கையை வென்றுள்ளது.

கேகாலை பிரதேசத்திற்கு மட்டுமின்றி கண்டி, குருநாகல், நீர்கொழும்பு, இரத்தினபுரி மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் இயங்கிவரும் காட்சியறைகள் மூலம் 2000க்கும் அதிகமானோருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எமது நிறுவனம் தனது அபிலாஷைகளை பன்முகப்படுத்துவதுடன், எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையில் முன்னணி ஆடை வர்த்தக நாமமாக மாறும் நோக்கில் நாட்டில் தனது பிரசன்னத்தை விரிவுபடுத்துவதன் மூலம் சமூகப் பொறுப்பிற்கு உறுதி பூண்டுள்ளது. அதற்காக பணிப்பாளர்களான மதுஷிகா செல்வராஜ், தினுஷிகா செல்வராஜ், ஷப்ராஜித் செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் முழு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.