இணையவழி மூலமாக கடன் பெறும் நாட்டு மக்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இணையத்தளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பிணையில்லாமல் உடனடியாகக் கடன் வழங்க முடியும் என்று கூறி கடன் வழங்குவதற்காக முன்வந்த பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் தொடர்பில் கண்காணித்து வருகின்றோம்.
அத்தகைய நிறுவனங்களிடமிருந்து தொலைபேசிகள் மூலம் கடன் வாங்கும் போது செலுத்த வேண்டிய வட்டி வீதம் மற்றும் கடன் கால அவகாசம் குறித்து உரிய கவனம் செலுத்தாமல் கடன் வாங்குவதால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
பெரும்பாலான சமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது எதிர்பாராதவிதமாக அதிக வட்டி செலுத்த நேரிடுவதுடன், அந்தக் கடன் நிறுவனங்கள் கடனை வசூலிக்க கடன் பெற்றவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் வகையில் அழைப்புகள் விடுப்பது மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக அவமானகரமான பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் நாளாந்தம் முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கமைய, இவ்வாறாக இணையம் மற்றும் தொலைபேசிகள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மேற்பார்வைப் பிரிவில் தகவல் கோரியுள்ளோம்.
இதன்போது அத்தகைய நிறுவனங்களில் பெரும்பாலானவை இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை அல்ல என்றும், கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ; தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் எப்போதும் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே தங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.