பரிதாப நிலையில் இலங்கை மக்கள்! எரிபொருள் நிலையத்தில் இளைஞன் மற்றும் 2 முதியவர்கள் பலி

நிட்டம்புவ, ஹொரகொல்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாக்குவாதத்தில் கொழும்பு - 14ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

37 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கொலை செய்துள்ளார். எரிபொருள் நிலையத்தில் அவ் இளைஞருக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டி சாரதி இளைஞனை கூர்மையான கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருந்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்ற 37 வயதான முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்ய நிட்டம்புவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நாளுக்கு நாள் நெருக்கடி நிலை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொது மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியாத பரிதாப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்த நெருக்கடி நிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கடுமையாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.  

நேற்று (20) மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இந்த இரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

கண்டி மற்றும் கடவத்தை பகுதியில் இந்த இரு சோக சம்பவங்களும் பதிவானதாக அவ்வந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸார் உறுதி செய்தனர்.

கண்டி - யட்டி நுவர கச்சேரிக்கு அருகிலுள்ள  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து நேற்று  ( 19) மாலை உயிரிழந்துள்ளார். 

வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

குறித்த முதியவர், மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதர்காக நேற்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மனி வரை வரிசையில் காத்திருந்துள்ளார்.  இவ்வாறான நிலையிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்ததுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக கண்டி  தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று ( 20) முற்பகல் வேலையில், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 70 வயதான முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கம்பஹா  மாவட்டம் கடவத்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பதிவானது.  

மாகொல பகுதியைச் சேர்ந்த,தொழில் ரீதியாக முச்சக்கர வண்டி சாரதியாக செயற்படும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நபராவார்.

குறித்த நபர் மண்ணெண்ணெய் பெற்றுக்கொல்வதற்காக வரிசையில் இருந்த போது மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக அவரை   கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையான ராகம வைத்தியசாலைக்கு அழைத்து சென்றபோதும், அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக  பொலிஸார் கூறினர்.