தமது சொந்த பிரதேசங்களில் உயர் பதவிகளை வகிக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சட்ட மீறல்கள் அதிகளவில் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை சுட்டிக்காட்டி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிஸ் தலைமையகம் கடிதங்களை அனுப்பியுள்ளது.
அரசியல் ஆதரவுடன் பதவிகளைப் பெற்ற இந்த அதிகாரிகள், அரசியல் அதிகாரத்திற்கு பயந்து பல்வேறு தேர்தல் சட்ட மீறல் வழக்குகளை மூடி மறைத்துள்ளதாகவும், இந்த கடிதங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல்
இதன் காரணமாக, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அதே பகுதிகளில் கடமையாற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரிவு பொறுப்பாளர்கள், பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் ஆகியோரை இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்ற போதிலும், அரசியல்வாதிகளின் தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவங்கள் அதிகளவில் பதுளை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன
அத்துடன் பதுளை மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்ட முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநர் அனுர விதானகமகே ஆகியோரனால் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களும் இதற்கு உதாரணமாகும் என தேர்தல்களுக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தல் சட்ட மீறல்கள்
எவ்வாறாயினும், தேர்தலின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படக்கூடாது என்பதால் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல்வாதிகளால், தேர்தல் சட்ட மீறல்களை மூடி மறைக்குமாறு பதுளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.