தேர்தல் பரபரப்பில் நகரும் இலங்கை - அடுத்தடுத்து களமிறங்கும் சீனா இந்தியா!


சீனாவின் உயர்மட்ட குழு ஒன்று சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா 2023ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இது என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சீனாவின் சர்வதேச துறை துணை அமைச்சர் சென் சோவ் தலைமையில் சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று சனிக்கிழமை விஜயம் செய்யவுள்ளது.

அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை சிறிலங்காவில் தங்கியிருந்து கலந்துரையாடலை முன்னெடுப்பார்கள் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இவர்கள் சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 19ஆம் திகதியன்று சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய இலத்திரனியல் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அவர் சிறிலங்காவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிறிலங்காவின் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்த போது அடுத்த வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சிறிலங்கா  வரவுள்ளார் எனத்  தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.