கடன் மறுசீரமைப்பில் வெற்றி பெற்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் என ஜனாதிபதி தகவல்கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் வெற்றிபெற்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும், இது நாட்டுக்கு கிடைத்த தனித்துவமான வெற்றி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) பாராளுமன்றத்தில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். அந்த உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எமது வெளிநாட்டு கடன் 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 10.6 பில்லியன் டொலர் இரு தரப்பு கடன்,11.7 பில்லியன் டொலர்கள் பல்தரப்பு கடன்,14.7 பில்லியன் டொலர் வணிகக் கடன்,12.5 பில்லியன் டொலர் கடன் பிணை முறிகள் மூலம் பெறப்பட்டவை. கடனை வெட்டிவிடுதல், கடன் சலுகை காலம், கடனை மீளச் செலுத்தும் கால அவகாசத்தை நீடித்தல் உள்ளடங்களான கடன் மறுசீரமைப்பு மற்றும் அதடனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திலும், வெளியிலும் பல தரப்பினர், பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவற்றில் சில விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை. சில விடயங்களில் பாதி உண்மையே இருந்தது.

அனைத்து கஷ்டங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் ஐ.எம்.எப். வேலைத் திட்டத்தை ஆரம்பித்து 15 மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வெளிநாட்டு இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வர முடிந்தது.

இந்த குறுகிய காலத்திற்குள் கடன் மறுசீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்த நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் பட்டியலில் நாம் முன்னணி வகிக்கிறோம். இது மிகப் பெரிய வெற்றியாகும். இது நற்செய்தியாகும்.

அடிப்படை கடனை மீளச் செலுத்துவதற்காக 2028ஆம் ஆண்டு வரை கால அவகாசம் எங்களுக்கு கிடைத்துள்ளது. வட்டி வீதம் குறிப்பிடத்தக்களவு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வட்டிவீதம் 2.1 அல்லது அதற்கு குறைந்தளவில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி கிடைக்கும்.

கடனை முழுமையாக செலுத்தி முடிக்க 8 வருட கால அவகாசம் கிடைத்துள்ளது. இன்னுமொரு வகையில் கூறுவதாயின், 2043ஆம் ஆண்டு வரை அவகாசம் கிடைத்துள்ளது.

கடன் சேவை காலத்தை நீடித்துக் கொள்வதுடன் அடிப்படைக் கடனை மீளச் செலுத்தும் தொகையை தொடர்ந்து அதிகரிக்க முடியும். இதன்பலனாக வட்டியாக செலுத்த வேண்டிய 5 பில்லியன் டொலர்களை சேமித்துக் கொள்ள முடியும்.

எனவே, பொருளாதாரத்தை வழமை நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.அந்நியச் செலாவணியை அதிகரித்துகொள்ள வேண்டும். அரச அடிப்படை நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் கடனை மீளச் செலுத்தும் இயலுமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இவற்றின் ஊடாக எதிர்காலத்தில் வலுவான நிலையில் இருந்து கடன் செலுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றார்

ஐ.எம்.எப்  வேலைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது நற்செய்தியா? துயரச் செய்தியா?

எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசைகளில் பல நாட்கள் இனி மேல் காத்திருக்க வேண்டியிருக்காது என்பது நற்செய்தியா? துயரச் செய்தியா?

30 வீதத்திற்கும் மேலாக இருந்த வங்கி வட்டி வீதம் 9 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளமை நற்செய்தியா? துயரச் செய்தியா?

70 சதவீதத்திற்கும் மேலாகச் சென்ற பண வீக்கம் கடந்த மாத இறுதியில் 1.7 வரை குறைந்திருப்பது நற்செய்தியா? துயரச் செய்தியா?

தொடர்ச்சியாக 6 காலாண்டுகள் ஆட்டம் கண்ட எமது பொருளாதாரம், வளர ஆரம்பித்தது நற்செய்தியா? துயரச் செய்தியா?

2022ஆம் ஆண்டு மே மாதமளவில் அதளபாதளத்தில் வீழ்ந்து, வற்றிப் போயிருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பு 5410 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்திருப்பது நற்செய்தியா? துயரச் செய்தியா?

ரூபா வலுவடைந்திருப்பது நற்செய்தியா? துயரச் செய்தியா?

அடிப்படை வைப்புக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளமை நற்செய்தியா? துயரச் செய்தியா?

பணத்தை அச்சிடாமல், வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகையை நிவர்த்தி செய்வது நற்செய்தியா? துயரச் செய்தியா?

வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கலுக்கான நடைமுறைக் கணக்கில் உபரி ஏற்பட்டது நற்செய்தியா? துயரச் செய்தியா?  எனவும் ஜனாதிபதி இதன்போது கேள்வி எழுப்பினார்.