மீண்டும் சீனாவின் பொறியில் இலங்கை....! ராஜபக்சக்களின் பாணியில் ரணில்

நாடு பேரழிவை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் அச்சமின்றி நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க அதனை எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதுவரை வெளியான தகவல்களின்படி, இலங்கை அதற்கு இருந்த அனைத்து வாய்ப்புகளையும் இழந்து விட்டதாக பல்வேறு தரப்பிலிருந்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் மீண்டுமொருமுறை தவறு இழைத்தால் உதவி கிடைக்காது என்று ரணிலிடம் நேரடியாக ஜப்பான் எச்சரிக்கை மணியடித்துவிட்டது.

மற்றொரு புறத்தில் சர்வதேச நாணய நிதியமும் ஒப்பந்த விவகாரத்தை தள்ளிப் போட்டிருப்பதாக அமைச்சர் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதுமாத்திரமன்றி உலக உணவு திட்ட தலைவரின் விஜயமும் பிற்போடப்பட்டிருக்கிறது.

மறுபுறத்தில் இலங்கையர்களுக்கு கிடைக்கவிருந்த வேலைவாய்ப்புக்கள் தற்போது, ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்டன என்றும் அடுத்தடுத்து சர்வதேசத்திலிருந்து அதிர்ச்சி தகவல்கள் இலங்கையை வந்தடைந்திருக்கிறது.

இத்தனைக்கும் முழுமையான காரணம், ரணில் விக்ரமசிங்க தான் பதவியேற்று 12 மணி நேரங்களுக்குள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையே என்கின்றன மேற்குலக ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும்.

பொறுமையான, நிதானமான அரசியல்வாதியாக இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட ரணிலின் மறு முகம் என்றும் கோட்டாபய ராஜபக்ச செய்யாததை ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரே நாளில் செய்து முடித்திருக்கிறார் என்றும், ரணிலின் இன்னொரு முகத்தை நாட்டு மக்கள் பார்க்கும் தருணம் வந்திருப்பதாகவும் ஓமல்பே சோபித தேரர் அண்மையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

காலி முகத்திடல், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை சர்வதேச நாடுகள் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளும் கண்டனங்களும் வெளிக்காட்டுக்கின்றன. குறிப்பாக, சர்வதேச ஊடகவியலாளர்கள் மீது கை வைத்ததும் நெருக்கடி மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தது என்பதும் மறுப்பதற்கில்லை.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வை ரணில் கொடுப்பார் என்று ஒரு தரப்பினர் நம்பியிருந்த சூழலில் இதுபோன்ற சிக்கல்கள் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

எவ்வாறாயினும், சகல சவால்களையும் வெற்றிகொள்ள ரணில் விக்ரமசிங்கவால் முடியும் எனவும் நாட்டை கட்டியெழுப்ப கால அவருக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டுமென பெல்பொல விபஸ்சி நாயக்க தேரர் நேற்று வலியுறுத்தியிருந்தார்.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியம், ஜப்பான் இரண்டுமே இலங்கையின் இறுதி நம்பிக்கையாக இருந்தது. ஆனால் தற்பொழுது அது இரண்டுமே கைக்கெட்டாது போல் தெரிகின்றது.

இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடுமையான நெருக்கடி, வரிசை யுகம் இன்னமும் நீங்கவில்லை. தொடர்ச்சியாக நெருக்கடி நிலை அதிகரிக்கும் என்று அபய சங்கு ஊதப்பட்டுக் கொண்டிருக்கையில், சீனாவை நோக்கி ரணில் விக்ரமசிங்க நகர்வதை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

குறிப்பாக, ராஜபக்சக்கள் சீன சார்பு மனநிலையில், இருந்தனர், சீனாவுடன் நெருங்கிய அரசியல் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்தினர். இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும், இருப்புக்கும் பெரும் தடையாக அல்லது ஆபத்தாக இருந்தது என்பதற்கு இரு வேறு கருத்துக்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

அதே பாணியில் ரணிலும் நகர்கிறாரா என்கிற பலத்த சந்தேகம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், ஆட்சியேற்ற சில நாட்களில் இந்தியாவிடம் தனது நகர்வுகளை மேற்கொள்ளாது தனது முதலாவது பயணத்தை சீனாவை நோக்கி ரணில் கட்டமைக்கிறார்.

அதாவது, ராஜபக்சக்களின் பாணியிலான அரசியலை நகர்த்துக்கிறார் என்கிற குற்றச்சாட்டுக்கள், கருத்துக்கள் தற்போது வெளிவருகின்றன.

ஏனெனில், இலங்கையில் தற்போது ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையில், சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவே அதிகளவான நிதியை வழங்கியிருப்பதாக அண்மையில் வெளியாகியிருந்த புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுக்கின்றன.

அதுமாத்திரமல்லாது, அத்தியாவசிய பொருட்களையும் இந்தியாவும் தமிழகமும் இலங்கைக்கு அள்ளிக் கொடுத்தது. அப்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக, தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இந்தியாவையும் தமிழகத்தையும் பாராட்டியதுடன், நன்றிகளையும் செலுத்தியிருந்தார்.

ஆனால், தான் சிறிலங்காவின் அதிபரானதும் ராஜபக்சக்களின் பாணியில் சீனாவை நாடுவது அரசியல் காய் நகர்த்தல்களா அல்லது இந்தியாவை வேறு திசையில் பயன்படுத்தும் நோக்கமா என்பதை ரணில் தான் அறிவார் என்றும் கூறப்படுகிறது.

எப்படியிருப்பினும், இலங்கையை படுகுழியிலிருந்து மீட்பதற்கு ரணிலுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமார சுவாமி நான்கு வழிமுறைகளை கொடுத்திருக்கிறார்,

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எனெனில் நாட்டில் அந்நிய செலாவணி கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் உதவினால் ஏனைய அமைப்புக்களும் இலங்கைக்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 உணவு, எரிபொருள், மருந்து வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகம் செய்வதற்கு அரசாங்கம் ஓர் வழியை தேட வேண்டுமேன தெரிவித்துள்ளார். இடைக்கால நிதி வசதிகள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

 அடிப்படை ரீதியான மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். நட்டமடைந்து வரும் அரசாங்க நிறுவனங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். நிவாரணங்கள் மானியங்கள் வரையறுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மத்திய வங்கி சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டின் வர்த்தக சூழ்நிலையை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நான்கு பரிந்துரைகளையும் அமுல்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என இந்திரஜித் குமாரசுவாமி நாட்டை மீட்க ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். .

எது எப்படியிருந்த போதிலும், ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் பாணியில் சென்று சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் நீடிக்க அனுமதிப்பாரா அல்லது சர்வதேச நாடுகளையும் இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாமல் ராஜதந்திர நகர்வுகளின் ஊடாக மீட்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது அனைத்திற்கும் அவர் ஆட்சியில் தொடர்ந்தும் நீடிப்பாரா என்பதை தென்னிலங்கை அரசியல் களமும் போராட்டகாரர்களின் முடிவுகளுமே தீர்மானிக்கும். ஏனெனில், ரணிலின் ஆட்சி முடிவுக்கு அநுரகுமாரவும் வேறு காட்சிகளும் காலக்கெடு கொடுத்திருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.