இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை; ஷாருஜன் துடுப்பாட்டத்தில் அபாரம்


இங்கிலாந்தில் நேற்று ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் 65 ஓட்டங்களால் இலங்கை இளையோர் அணி இலகுவாக வெற்றிபெற்றது.

இப்போட்டி செல்ஸ்போர்ட் கவுன்டி விளையாட்டரங்கில் பகல் இரவுப் போட்டியாக நடைபெற்றது.

சண்முகநாதன் ஷாருஜன், மஹித் பெரேரா, தினுரு அபேவிக்ரமசிங்க ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் விஹாஸ் தெவ்மிக்கவின் துல்லியமான பந்துவீச்சும் இலங்கை இளையோர் அணி வெற்றிபெறுவதற்கு பெரிதும் உதவின.

4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் தினுர களுபஹனவுடன்  73 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷாருஜன், 5ஆவது விக்கெட்டில் மஹித் பெரேராவுடன் மேலும் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இதனைவிட மஹித் பெரேரா, தினிரு அபெவிக்ரமசிங்க ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினார்.

மஹித் பெரேரா ஆட்டம் இழக்காமல் 58 ஓட்டங்களையும் சண்முகநாதன் ஷாருஜன் 57 ஓட்டங்களையும் தினிரு அபேவிக்ரமசிங்க 52 ஓட்டங்களையும் தினுர களுபஹன 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நோவா கோன்வெல் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

295 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளையோர் அணி 43.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

நோவா தெய்ன் 58 ஓட்டங்களையும் அணித் தலைவர் லூக் பென்கென்ஸ்டீன் 51 ஓட்டங்களையும் ஹெரி முவர் 26 ஓட்டங்களையும் இலங்கை வம்சாவளி கேஷன பொன்சேகா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக்க 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹிவின் கெனுல 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திசர ஏக்கநாயக்க 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரவீன் மனீஷ 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.