இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 5 பாதாள குழு தலைவர்கள் அதிரடியாக ஒன்றாக கைது .... அடுத்து நடக்கப்போவது என்ன?

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், இலங்கையின் பாதாள உலக குழுவைச் சேர்ந்த  தலைவர்களாகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குழு தலைவர்கள், இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி ஹிரு ஆகியோர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் இருந்த பெக்கோ சமனின் மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும், மூன்று வயது குழந்தை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தின் கூண்டில் பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பதாள உலக குழு தலைவர் கெஹல்பத்தர பத்மே மீது குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணையில் குற்ற கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியிருந்தார்.

மேலும், கெஹெல்பத்தர பத்மே உள்ளிட் இந்தக் குழு மீது பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற பின்னணியில், கெஹெல்பத்தர பத்மேவுக்கு நெருக்கமான பாதாள உலகக் குழு கும்பல்களைச் சேர்ந்த பலர் கடந்த காலங்களில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் 'பஸ் தேவா' கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுத்த விசாரணைக்கு அமைய, கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நாட்டில் நடத்தி வரும் வலஸ் கட்டா என்ற திலின சம்பத்தும் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கஜ்ஜா என்ற அனுர விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.


இதுதொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கருத்து வெளியிட்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய



பாதாள குழுவைச் சேர்ந்த ஐந்து குற்றவாளிகள் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்  
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தற்போது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்பில் காணப்படுகின்றனர்.

பல சந்தர்ப்பங்களில், இந்த நாட்டில் குற்றங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் வழிநடத்தப்பட்டுள்ளன.
தற்போது அத்தகைய குழுக்கள் குறித்த சட்ட முடிவுகளை அரசியல் அழுத்தமின்றி  எடுக்க  பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

டுபாய், ஓமன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அதிகமாக இருக்கின்றனர்.
 அவர்கள் குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறிய பொலிஸ்மா அதிபர், இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஆதரவளித்த இந்தோனேசிய தூதரகத்திற்கு விசேட நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.


இதேநேரம் இங்கு கருத்து வெளியிட்ட மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால



"ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு விசேட நீதிமன்றத்தை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நாங்கள் இப்போது திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக அவர்களை தண்டிக்க ஒரு நாகரிக சமூகமாக, இந்த செயல்முறை சட்டத்தின் முன் நடைபெறுகிறது.

தற்போது, பல விசேட மேல் நீதிமன்றங்களை நிறுவ திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்.

முழு வீச்சில் நடைபெறும் இந்த அனைத்து செயற்பாடுகளும் அவர்களுக்கு உடனடியாக தண்டனையை பெற்றுத் தரவே" என்றார்.



இதேநேரம் பாணந்துறை - வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த நபர் "பாணந்துறை நிலங்க" என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் மாமனார் என்பது தெரியவந்துள்ளது.

அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய டில்ஷான் சுதேஷ் பெர்னாண்டோ என்பரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பாணந்துறை பகுதியில் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்து என்பவரின் தரப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சம்பவம் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.