முகத்தில் அதிக முடி.. கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த இந்திய சிறுவன்!


ஆணின் முகத்தில் அதிக முடி கொண்டவராக, இந்தியாவைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸில் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த 18 வயது சிறுவனான லலித் படிதார், முகத்தில் கிட்டத்தட்ட 95வுpத முடியுடன், அதாவது ஆணின் முகத்தில் அதிக முடி கொண்டவராக கின்னஸில் உலக சாதனை படைத்துள்ளார்.  

 மார்ச் 2025இல் வெளியிடப்பட்ட கின்னஸ் உலக சாதனை அறிக்கையில், லலித்தின் முகத்தில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 201.72 முடிகள் இருந்துள்ளன.
 
இது. அவரது முகத்தில் முடி வளர்ச்சி மிகவும் அடர்த்தியாக இருப்பதைக் குறிக்கிறது. லலித்துக்கு 'வேர்வுல்ஃப் சிண்ட்ரோம்' எனப்படும் மிகவும் அரிதான ஒரு வகை நோய் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இது அசாதாரணமாக, அடர்த்தியான முக முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.


இந்த நிலைக்கு ’ஹைபர்டிரிகோசிஸ்’ என்ற ஓர் அறிவியல் பெயரும் உள்ளது. இந்த நிலை அசாதாரணமானது என்பதால், ஆரம்பத்தில் இது அவரது நண்பர்களிடமிருந்து எதிர்மறையான கவனத்தை ஈர்த்தது.
 
தன்னைச் சுற்றியுள்ள மக்கள் முன்பு தன்னைக் கண்டு பயந்ததாக லலித் கின்னஸிடம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “அவர்கள் என்னைப் பார்த்து பயந்தார்கள். ஆனால் அவர்கள் என்னை அறிந்துகொண்டு என்னுடன் பேசத் தொடங்கியபோது, நான் அவர்களிடமிருந்து அவ்வளவு வித்தியாசமாக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
 
வெளிப்புறமாகத்தான் நான் வித்தியாசமாகத் தெரிந்தேன். இந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேநேரத்தில், இந்த தோற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது. இதை நான் மாற்ற விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.