கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு வெளியானது


இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் வழங்குவதுடன், கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி வீதத்தை குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கடன் வழங்கும் தரப்பினருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நல்ல நிலையில் இருப்பதாகவும், கடனுக்கான விதிமுறைகள் குறித்த முறையான இணக்கப்பாடுகள் மிக விரைவில் எட்டப்படும் எனவும் உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழு உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு விடுத்த அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கிய 17 நாடுகள் கடந்த 2023 ஆம் ஆண்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்காக இந்தக் குழுவை அமைத்தன.

இந்தக் குழுவில் இருந்து சீனா விலகியுள்ள போதிலும், அவதானிப்பாளராக விவாதங்களில் பங்கேற்றுள்ளது.

இதனிடையே, சீனக் கடனை மறுசீரமைப்பது குறித்து இரு நாடுகளின் அரசாங்கங்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடும் உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழு, எதிர்காலத்தில் சீனாவுடன் ஒரு உடன்பாட்டை எட்டப் போவதாகவும் தெரிவித்துள்ளது.