இஸ்ரேலுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் வழக்கு: பலஸ்தீனமும் இணைய நீதிமன்றறில் விண்ணப்பம்




இஸ்ரேல் மற்றும் ஹமாஸூக்கு இடையிலான போர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்கின்ற நிலையில், கடந்த சில நாட்களாக ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக விளங்கும் ரஃபா நகரில் மிகத் தீவிரமாக தாக்குதல்களை நடாத்தி வருகிறது இஸ்ரேல்.

உலக நாடுகள் இந்த தாக்குதலை நிறுத்தக்கோரினாலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றது.

இந்த தாக்குதலில் சுமார் 35ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலானது, பலஸ்தீனத்தின் மீது தீவிரமான போர் நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்து சர்வதேச நீதமன்றத்தை நாடியிருந்தது  தென்னாபிரிக்கா .

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் மறுத்தது.

இந்நிலையில் இஸ்ரேல் அமைப்பினர் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி  தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கில், இணைவதற்கு அனுமதி கோரி, பலஸ்தீன அதிகாரிகள் சர்வதேச நீதிமன்றத்தில் 'பலஸ்தீன மாநிலம்' சார்பாக விண்ணப்பித்துள்ளனர்.

இதேவேளை சுற்றுலா தளங்களுக்கு பெயர் பெற்ற மாலைத்தீவிற்குள் நுழைய இஸ்ரேலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் மேற்கொள்ளப்படும் போரைத் தொடர்ந்து மாலைத்தீவு அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையின் பரிந்துரையைத் தொடர்ந்து, இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்கு தடை விதிக்க மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு முடிவு செய்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹ்சான் இந்த முடிவை அறிவித்தார்.

 இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாலைத்தீவிற்குள் நுழைவதைத் தடுக்க தேவையான சட்டங்களைத் திருத்துவதற்கும், இந்த முயற்சிகளை மேற்பார்வையிட அமைச்சரவை துணைக்குழுவை நிறுவுவதும் அமைச்சரவை முடிவில் அடங்கும்.

கூடுதலாக, பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் விடயத்தில், பலஸ்தீன தேவைகளை மதிப்பிடுவதற்கு ஒரு சிறப்பு தூதுவரை நியமிக்க ஜனாதிபதி முய்ஸு முடிவு செய்துள்ளார்.

மேலும் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் பிரச்சாரத்தை அமைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.


இதனிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் மக்கள் தங்கள் நாட்டுக்கு வருவதைத் தடை செய்யும் வகையில் சட்டங்களைத் திருத்த மாலைத்தீவு அரசு முடிவு செய்துள்ளமை தொடர்பான தகவல் வெளியான நிலையில், தற்போது மாலைத்தீவில் தங்கியுள்ள இஸ்ரேல் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.