பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக், துபாயிலிருந்து திரும்பும் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி மற்றும் வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி வெள்ளவத்தையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து நதீன் பாசிக் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தச் சுற்றிவளைப்பின் போது, வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கொட்டிகாவத்தை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
எனினும், விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு நதீன் பாசிக் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இந்த சுற்றிவளைப்பின் போது ஹெராயின் போதைப்பொருள், கையடக்க தொலைபேசி, மடிக் கணினி, வெளிநாட்டு நாணயங்கள், டுபாய் நாட்டு அடையாள அட்டை ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
மேலும், சந்தேக நபர் பல்வேறு நபர்களுடன் மேற்கொண்ட பண பரிவர்த்தனைகளை விவரிக்கும் ஆவணங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நதீன் பாசிக் இலங்கை திரும்பிய நிலையில் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.