வடக்கு பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பாரிய நிலப்பகுதி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 31,43871 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் இன்று (26) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.  

அந்த அறிக்கையில்,  ”இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தினால், 

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன், அம்பகாமம், ஒழுமடு மற்றும் மாங்குளம் கொக்காவில் பகுதியிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும் 31,43871 நிலப்பரப்பிலிருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு, அம்பகாமம் இமாங்குளம், கொக்காவில், தட்டுவன்கொட்டி மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.