உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் பல துப்பாக்கிகள்; பொலிஸார் தீவிர விசாரணை

மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த சட்டத்தரணி வீட்டில் இருந்தே குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி கிடைக்கபெற்ற தகவலின் படி, மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, பல துப்பாக்கி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, போர் 12 ரக துப்பாக்கி  (டிழசந 12), ஒரு ரிப்பீட்டர் வகை துப்பாக்கி, போர் 12 ரக துப்பாக்கிகளின் 6 பாகங்கள், பெரல் 11 ரக துப்பாக்கி , 2 சிறிய துப்பாக்கிகள், போர் 12 ரக மற்றும் போர் 16 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 440 புதிய தோட்டாக்கள், மற்றும் பல துப்பாக்கிகளின் பாகங்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிகள் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்காக வழங்கப்பட்டதா என்பதையும், வேறு பாதாள உலக குழுக்களுக்கு வழங்கப்பட்டதா என்பதையும் கண்டறிய தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அவற்றில் பல துப்பாக்கிகள் இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால், அவை அவரால் அல்லது வேறு தரப்பினரால் தயாரிக்கப்பட்டதா என்பதை தீர்மானிக்கவும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.