போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணிய முன்னாள் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாதாள குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணிய முன்னாள் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்காக 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள குழு முக்கியஸ்தர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது அவர்களுடன் தொடர்புடைகளை பேணிய பல்வேறு அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளதாக அரசாங்க தரப்பினரால் கடந்த வாரங்களில் கூறப்பட்டு வந்தது.

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாளகுழு முக்கியஸ்தர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்ற உத்தரவுடன் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதன்போது கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவங்களுடன் இவர்களுக்கும் நாட்டில் உள்ள வேறு தரப்பினருக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்பிலும் தகவல்கள் வெளிவருவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலைமையில் இவர்களுடன்தொடர்புகளை பேணிய பிரபல அரசியல்வாதிகள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என்பதுடன், இதன்படி அவ்வாறான அரசியல்வாதிகள் கைதாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன