இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் கெஹெல்பத்தர பத்மே நீமிமன்றினுள்ள வைத்து படுகொலை செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர், கணேமுல்லே சஞ்சீவவின் கொலை உட்பட பல கொலைகளுடன் தொடர்புடையவர் என நீதிமன்றுக்கு ரகசிய அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வணிகக் குற்றப் பிரிவினரால் நேற்று(19.09)கொழும்பு மேலதிக நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் பிரகாரம் 90 நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாவும் அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த மேலதிக நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக நீதவான் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதா என்று விசாரித்தார்.
அதன்படி, சந்தேக நபர் தொடர்பான கண்காணிப்பு கொழும்பு கோட்டை நீதவானால் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமர்பிக்கப்பட்ட வழக்கு அறிக்கையை பெட்டகத்தில் வைக்க உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பின்னர், தொடர்புடைய வழக்கு அறிக்கையை பெட்டகத்தில் வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேநேரம் மித்தேனிய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன மாதிரிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, அவை ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செப்டம்பர் 6 ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க ஆகியவர்கள் இந்நாட்டில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்களை மித்தேனிய பகுதியிலிருந்து மேற்கு வடக்கு குற்றப்பிரிவு மீட்டது.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பெகோ சமனிடம் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், குறித்த இரசாயன மாதிரிகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அறிக்கையில், 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று (19) அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஆய்வறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த அறிக்கையும் மித்தேனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுபவை என உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.