யாழ் விடுதியில் இரகசிய கமரா விவகாரம் - தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!


யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்று தொடர்பில் அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஒன்றியம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் செயலாளர் சி. கார்திகனின் கையொப்பத்துடன் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுற்றுலாத்துறையானது நீண்ட கால யுத்தம், மற்றும் கொரோனா பாதிப்புகளின் பின்னர் மிகவும் நெருக்கடியான சூழலில் இயங்கி வருகின்றது.

இந்த நிலையில் எந்தவிதமான உறுதிப்படுத்தல்களும் இன்றி வெளியிடப்பட்ட செய்திகளால் தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால் சிரமத்திற்கு மத்தியில் சுற்றுலாத்துறையில் பணியாற்றி வருகின்ற பலர் பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.