பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் : திடீரென் பேச்சுவார்த்தையை புறக்கணத்த முதலாளிமார் சம்மேளனம்



பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் முதலாளிமார் சம்மேளனம் சமூகமளிக்காமையினால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபை கூடுவது குறித்து தமக்கு உரிய நேரத்தில் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்து முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தையை புறக்கணித்துள்ளது.

நாரஹேன்பிட்வில் உள்ள தொழில் திணைக்களத்தில் நேற்று இன்று காலை 10 மணிக்கு தொழில் ஆணையாளர் நாயகம் தலைமையில் தேயிலை சம்பள நிர்ணய சபை கூடியது.
தொழிற்சங்களினால் முன்வைக்கப்பட்டிருந்த 1700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்டிருந்ததோடு, இந்த கோரிக்கை கம்பனிகள் ஏற்காவிட்டால் வாக்கெடுப்பினை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

 
எவ்வாறிருப்பினும் இறுதி தருணத்தில் கம்பனிகளின் பிரதிநிதிகள் சமூகமளிக்க முடியாது என அறிவித்தமையால் எவ்வித தீர்மானத்தையும் எட்ட முடியாத நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்ரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் கே.மாரிமுத்து தெரிவிக்கையில்,

இலங்கை தொழிலாளர் காங்ரஸினால் முன்வைக்கப்பட்ட 1700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரேரணையை தொழில் ஆணையாளர் நாயகம் விவாதத்துக்கு எடுக்க தீர்மானித்தார். எனினும் தொழில் தரநர்கள் இன்றி அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதால் அதனை நிறைவேற்ற முடியாது என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். எனவே அவர்கள் கட்டாயமாக வரவழைக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.

முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சமூகமளிக்காமையினால் பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே இந்த பேச்சுவார்த்தையை பிரிதொரு தினத்தில் முன்னெடுப்பதற்கு தொழில் ஆணையாளரால் தீர்மானிக்கப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சியை இ.தொ.கா. ஒருபோதும் கைவிடாது என்றார்.

 இதேநேரம் தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்வு எட்டப்படும் நிலையில், முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருகை தராமல் இருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சம்பள நிர்ணய சபையிடம் அலட்சிய போக்கை கடைப்பிடிக்கும் முதலாளிமார் சம்மேளனம், தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவார்கள் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.