சஜித் - ஜலனி கைதாக வாய்ப்பு, நிமல் லான்சா அதிரடியாக கைது, மன்றில் ஆஜரான ரத்தன தேரர்



எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நல்லாட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில், பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் குழுவொன்று ஜலனி பிரேமதாசவின் தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டதாக முறைப்பாடு வழங்கிய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பத்தொன்பது அரசு ஊழியர்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர்கள் தங்கள் பணியுடன் தொடர்பில்லாத வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சஜித் பிரேமதாசாவின் மனைவியின் பணி, அவரது அரசியல் பணி மற்றும் அவரின் தனிப்பட்ட பணி ஆகியவற்றை செய்வதற்கு குறித்த ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேநேரம் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாக தலைமறைவாகியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், இன்று (29) காலை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில் அவரை எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
ஆகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அதியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ‘அபே ஜன பல’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்காக, கட்சியின் பொதுச் செயலாளரான வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அவரது கையொப்பம் பலவந்தமாகப் பெறப்பட்டதாக அத்துரலியே ரத்தன தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதுரலிய ரத்தன தேரரை கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கடந்த காலங்களில் பல இடங்களில்  தேடியிருந்ததோடு அவர் நாட்டை விட்டுச் தப்பிச் செல்ல முயன்றதாகவும் புலனாய்வு பிரிவு தெரிவித்திருந்தது.
 

இதேநேரம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 
நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
 
2006 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.