வன்முறையைத் தூண்டிவிட்டுள்ள ஜே.வி.பி.யால் பல்கலைக்கழகத்துக்கு பூட்டு : சஜித் விசனம்

 

வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை. ஆனால் ஜே.வி.பி.யின் வன்முறைகள் மற்றும் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டார்.

ஹபராதுவ நகரில் நேற்று  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர்  

தற்போது வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
 
ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை. ஆனால் ஜே.வி.பி.யின் வன்முறைகள் மற்றும் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது.

புள்ளடிக்கு பதில் குண்டுகளையும் துப்பாக்கி ரவைகளையும் பயன்படுத்தி, துப்பாக்கி முனையில் வன்முறையை ஏற்படுத்தி, கடதாசி ஒன்றின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கின்ற யுகத்திற்கு அநுரகுமார நாட்டை கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்.
 
ரணிலும் அநுரவும் சேர்ந்து வைக்கும் பொறிக்குள் நாட்டு மக்கள் சிக்க மாட்டார்கள்.

தற்போதைய ஜனாதிபதி தேர்தல் போட்டி களத்தில் இருக்கின்றார். வேட்பாளரொருவர் தான் தோல்வியடைவதாக தானே கூறிக் கொள்வது இதுவரையும் கேட்காத ஒரு விடயமாகும்.
 
இது புதுமையாக இருக்கின்றது. ரணில் விக்ரமசிங்க நாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக அன்றி அநுரகுமார திசாநாயக்கவை கையில் தாங்கிக் கொள்வதற்காகவே செயற்பட்டு வருகிறார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் ரணில் விக்கிரமசிங்க என்னை தோல்வியடைய செய்ய முயற்சி செய்தார்.
இம்முறை தேர்தலின் போதும் என்னை தோல்வியடைய செய்யவே முயற்சி செய்கின்றார்.
 
ரணில், அநுர என்போர் இருதரப்பினர் அல்ல. இவர்கள் ஒரே அரசியல் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
 
இந்தக் கும்பலுக்கான தேவை நாட்டைக்கட்டி எழுப்புவதல்ல, 220 இலட்சம் மக்களின் மீதும் வரிச் சுமையை அதிகரிப்பதாகும் என்றார்.