இன்னும் 2 வாரங்களில் முடிவுக்கு வருகிறது ரஷ்யா - உக்ரேன் போர்..! : ட்ரம்ப் அறிவிப்பு

ரஷ்யா - உக்ரேன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரேன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 3 வருடங்களுக்கு மேல் நீடித்து வருகிறது.
இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார்.
அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, நேடோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே உள்ளிட்டோருடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப்,
உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க - ரஷ்யா - உக்ரைன் ஜனாதிபதிகள் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
 மேலும் ரஷ்யா - உக்ரேன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் நிதி உதவியுடன் அமெரிக்காவிடம் இருந்து இலங்கை மதிப்பில் 27 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்வது குறித்தும் டிரம்புடன் ஆலோசனை நடத்தியதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
 

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து ரஷ்ய ஜனாதிபதி புடின்  கலந்துரையாடியுள்ளார்.
உக்ரேன்ரஷ்யா போர் தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியிடம் புடின் கலந்துரையாடியுள்ளார்.