பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்.. காஸா மீதான தாக்குதலை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு, மகிழ்ச்சியில் உலக நாடுகள்


அமைதி திட்டத்தை ஹமாஸ் ஓரளவு ஏற்றுக்கொண்டதை அடுத்து, காஸா மீதான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஒருசேர குரல்கொடுத்து வரும்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்தார்.
இப்பரிந்துரை, போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிப்பட்டிருக்கும் பிணைக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல், இஸ்ரேல் படிப்படியாக காஸாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், காஸாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ{க்கு பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
அவ்வாறு பதிலளிக்கவில்லை என்றால் முடிவு மிக மோசமானதாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஹமாஸ{க்கு அரபு நாடுகள் வாயிலாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், காஸாவில் தங்கள் பிடியில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், காஸாவின் நிர்வாகத்தை பாலஸ்தீன அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஹமாஸ் அமைப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எனினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இதற்கு எவ்வித பதிலும் கொடுக்கவில்லை. ஆனாலும், காஸா மீது குண்டுவீசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ”ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். ஆகையால், காஸா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும்” ”இது காஸாவைப் பற்றியது மட்டுமல்ல. இது மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைதியைப் பற்றியது" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் வார்த்தைகள் நம்பிக்கையை விதைப்பதால், காஸாவில் நடைபெறும் போர், விரைவில் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.
 இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒரே சர்வதேச தலைவராக ட்ரம்ப் மாத்திரமே உள்ளார் என சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதியன்று பிடித்துச் சென்ற மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 ஹமாஸ் அமைப்பு தற்போது 48 பணயக்கைதிகளை தடுத்து வைத்துள்ளது, அவர்களில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.